DIv.sect put logoஎமது நோக்கு

புத்தளம் பிரதேச செயலக பிரிவில் மிகத்திறமை மிக்க பொதுசன நட்புறவான  அரச சேவை.

எமது கொள்கை

அரச கொள்கைகளை கடைப்பிடிப்பதனூடாக சமூக வளங்களை இனங்கண்டு அவற்றை மக்களின் பங்களிப்புடன் பொருத்தமான அபிவிருத்தி செயன்முறையை திட்டமிடலின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்ந்த செயற்திறன் மிக்கதும் பயனுறுதிமிக்கதுமான சேவையினை மக்களுக்கு வழங்கல்.
 
 

புத்தளம் பிரதேச செயலகப் பிரிவு

ஒரு குறுக்குவெட்டு

பெயர்

உப்பு + தளம் = உப்புத்தளம் என்ற சொல் மருவி புத்தளம் ஆனது என்பது சிலரின் கருத்தாகும். புதிதாக உப்பளங்கள் வெட்டப்பட்டதால் புது + அளம் = புத்தளம் என்றானது என்பது மற்றொரு சாராரின் கருத்தாகும். தற்கால தேசிய உப்பு நுகர்வு தேவையின் 30% பூர்த்தி செய்கின்றமை இப்பெயர் பெறுவதற்கு போதுமான சான்றாகும். வேறு கருத்துக்களும் உள்ளன.

புவியியல் அமைப்பு

71 சதுர மைல் பரப்பளவைக் கொண்ட புத்தளம் பிரதேச செயலகப் பிரிவு, இலங்கையின் வடமேற்கு உலர் வலயத்தில் அமைந்துள்ளதுடன், புவி விஞ்ஞான அமைவை நோக்கும் போது,இலங்கையின் வடமேற்குக் கரை ஓரத்தில் அமைந்துள்ளதாக விளக்கப்பட்டுள்ளது.

நிருவாக எல்லைகள்

இப்பிரதேச செயலகப் பிரிவின் எல்லைகளாக,வடக்கே வண்ணாதவில்லு பி.செ.பிரிவின் தெற்கு எல்லையும், தெற்கு எல்லையாக முந்தல் பி.செ.பிரிவின் வடக்கு எல்லையும், மேற்கில் புத்தளம் சிறு கடலும் (கடல் நீரேரி), கிழக்கு எல்லையில் மஹகும்புக்கடவல மற்றும் ஆனைமடு பி.செ.பிரிவுகளின் மேற்கு எல்லைகளுமாகும். கற்பிட்டி பி.செ.பிரிவின் கிழக்கு எல்லையின் கீற்றளவும் தொடர்புபடுகின்றது.

உள்ளூராட்சி மன்ற பிரிவுகளை நோக்கும் போது, புத்தளம் நகர சபை அதிகார பிரிவு முழுவதும், புத்தளம் (மதுரங்குளி) பிரதேச சபை அதிகாரப் பிரிவின் ஒரு பகுதியும் உள்ளடங்குகின்றது. தேர்தல் அதிகாரத் தொகுதிகள் எனும் போது, புத்தளம் தேர்தல் தொகுதியின் ஒரு பகுதியும், ஆனைமடு தேர்தல் தொகுதியின் ஒரு பகுதியும் இப்பி.செ. பிரிவுக்குரியது.

புத்தளம் பி.செ. பிரிவில் 22 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உண்டு. அதில் 16 புத்தளம் தேர்தல் தொகுதியிலும், மீதி 6 கி.உ.பிரிவுகள் ஆனைமடு தேர்தல் தொகுதியிலும் அமைந்துள்ளன. இக் கி.உ.பிரிவுகள் 22 இல், 86 கிராமங்கள் உள்ளன.

மண்ணின் தன்மை

இரு வகை மண் அமைப்புக்கள் இப்பிரதேச செயலகப் பிரிவில் பரந்துள்ளது. தெற்குப் பகுதியில் செங்கபில இலற்றசோல் மண்ணும், வடக்குப் பகுதி சதுப்பு மண்ணையும் கொண்டுள்ளது.

செங்கபில இலற்றசோல் மண் : இலங்கையிலுள்ள மிகப் பழமை வாய்ந்த மண் வகையாகும். நிகழ்கால காலநிலைக்கு முற்றிலும் மாறுபட்ட காலநிலை நிலவிய காலத்தில் வளர்ந்த மண் வகையாகும். மண் தட்டு மிகவும் ஆழமானது. சீரான நீரோட்டம் கொண்டது. உலர்ந்த மற்றும் ஈரலிப்பு நிலையில் தூளானாலும் ஈரமான போது ஒட்டாத தன்மையும் அதற்கு உண்டு. இரசாயனச் செழுமையில் உரமற்ற மண் இதுவாகும். எனினும் கோடை காலத்தில் போதுமான அளவு நீர் பாசனம் செய்யப்படுமாயின் தேசி (எலுமிச்சை) இனப் பயிர் செய்கைக்கு சிறந்ததாகும். மர முந்திரிகை செய்கைக்கும் பொருத்தமானது.

சதுப்பு மண் : இலங்கையின் மண் வகைப்படுத்தலின் கீழ் சதுப்பு மண்ணை இனம் காணும் உலர் உப வகை இங்குண்டு. இம்மண்ணில் நீரோட்டம் மிகவும் குறைவாகும். சதுப்பபு மண் எனப்படுவது புவி மாற்றங்களின் போது நீர் தேக்கி வைத்த கனியங்களாகும். இம் மண்ணில் பக்கவாட்டு வளர்ச்சி இல்லாதிருப்பதுடன், சிறந்த நீர்ப் பாசனை செய்ய முடியுமாயின் சதுப்பு நிலம் நெற் பயிர் செய்கைக்கும், மரக்கறி (படு பயிர்) செய்கைக்கும் மிகவும் பொருத்தமாகும்.

நீர் வளம்

இப்பிரதேச செயலகப் பிரிவில் குடி நீர் பிரச்சினை மிகவும் மோசமாக நிலவுகின்றது. 15 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் குடிப்பதற்கு உகந்த நீர் போதுமானதாக இல்லாமலிருப்பதும், குடிப்பதற்கு உகந்த நீரே இல்லாமலிருப்பதும் இப் பிரச்சினைக்கு காரணியாகவுள்ளது.

ஆழ் கிணறுகள் : குடிப்பதற்கு பெற்றுக் கொள்ளும் தண்ணீர் உள்ள வரையறுக்கப்பட்ட அளவு கி.உ.பிரிகளில் ஆழ் கிணறுகள் வெட்டப்பட்டு பயன்படுத்தப்படுவதோடு, இப் பி.செ. பிரிவுக்குள் 5448 ஆழ் கிணறுகள் உள்ளன.

குழாய்க் கிணறுகள் : இத்திட்டத்தின் கீழ் 62குழாய்க் கிணறுகள் உள்ளன. யுனிசெப் நிறுவனம், பிரதேச சபைகள் போன்றவை மூலம் குழாய்க் கிணறுகள் அமைத்து கிராமத்தவரின் பாவனைக்காக வழங்கப்பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகளை பிரதேச சபைகள் மேற் கொள்ளுகின்றன.

குழாய் நீர் தொகுதி : புத்தளம் நீர் விநியோக வடிகாலமைப்பு சபையினால் சீனாவுடன் இணைந்து புத்தளம், சேனைக்குடியிருப்பு கி.உ.பிரிவில் பிரம்மாண்டமான கிணறு ஒன்றை தோண்டியதன் பின், 1995 ஆம் ஆண்டு முதல் புத்தளம் நகர சபை எல்லைக்குள் குழாய் நீர் வசதி வழங்கப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக தென் ஆசிய அபிவிருத்தி வங்கி உதவி திட்டத்தின் கீழ் கிராம மட்டங்களில் குடி நீர் வழங்கும் செயறறிட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.

மக்கள் (சமய மற்றும் இன)

சமய ரீதியாக இஸ்லாம், பௌத்த, கிறிஸ்தவ மற்றும் இந்துக்கள் என்றும், இன ரீதியாக வகைப்படுத்தும் போது முஸ்லிம், சிங்களம், தமிழ் மக்களுக்கு மேலதிகமாக கெபேர் (காபிரி), மலே, நாடோடி மற்றும் டச்சு வம்சாவழியினரும் வாழ்கின்றனர். அவரவர் சமய கலாசார உரிமைகளைக் கற்பிக்கும் சமய வழிபாட்டுத்தளங்கள், சமய கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றி்னால் போஷாக்கு பெற்று தமது கலாசாரத் தனித்தன்மையை காக்கும் சம்பிரதாய வாழ்வு முறை வேரூன்றி உள்ளது.

இடம்பெயர்ந்தோர் : புத்தளம் பி.செ.பிரிவு இடம்பெயர்ந்த மக்களுக்கு அடைக்கலம் வழங்கிய பிரதேசமாக திகழ்கின்றது. 1991 ஒக்டோபர் மாதம் வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து L.T.T.E. இயக்கத்தினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் புத்தளம் பி.செ.பிரிவில் நிறைந்து வாழ்கின்றனர். இப் பிரதேசத்தின் வளப் பங்கீடு முதலாக சமூக மற்றும் சூழல் பிரச்சினைகள் கூர்மையடைதல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் தோன்றுவதில் இவ் இடம்பெயர்ந்த மக்களின் வருகையும் காரணியானது என்பதை அது தொடர்பாக பகுத்து நோக்கும் போது தெளிவாகின்றது. (குடிசனத் தொகையில் இடம் பெறவில்லை - தொகுப்பாளர்)

கல்வி (முறைசார் மற்றும் முறைசாரா)

முன்பள்ளி பாடசாலை தொடக்கம் கனிஷ்ட மற்றும் மஹா வித்தியாலயங்களும், 2 தேசிய பாடசாலைகளும், முறைசாரா உயர் கல்விக்காக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கற்கை நிலையமும், முறைசாரா மூன்றாம் நிலைக் கல்வியை உறுதிப்படுத்துவதற்காக தேசிய தொழில் பயிற்சிக் கல்லூரியின் பயிற்சி நிலையமும் அமைந்துள்ளன. இவற்றிற்கு மேலதிகமாக தனியார் கல்வி நிலையங்களும் இயங்குகின்றன. இத்தனை வளங்கள் நிறைந்திருக்கும் நிலையிலும் கூட, சமுக ரீதியாக முன்னேற்றம் அடையாத, கல்வி சார்ந்த நடவடிக்கைகளில் அக்கறை அற்றவர்களும் இப் பிரிவுக்குள் வாழ்வதைக் காணலாம்.

பொருளாதரம் (விவசாயம் மற்றும் தொழில்கள் )

புத்தளம் நகரம் வர்த்தக மையமாகும். சிறுகடல் நீரினால் மேற்கொள்ளப்படும் உப்பு உற்பத்தியை நோக்கும் போது, உப்பள உரிமையாளர்கள் உட்பட உப்பு செய்கை சார் தொழில்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை 10,000 வரையிலாகும். உப்பு உற்பத்தி புத்தளம் மற்றும் பாலாவி உப்பளங்களில் நடைபெறுகின்றது. கரையோர மக்கள் சிறுகருவி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். விவசாயத்திற்கு பொருத்தமான பிரதேசமாக கருதப்படாத போதிலும் வடக்கு எல்லையில் மர முந்திரிகை வாசம் மூக்கை துளைக்கும் போது, தென் கிழக்கு எல்லையில் தெங்குச் செய்கையால் பால் பொங்குகின்றது. நெற் பயிர்ச்செய்கை சிறிதளவு நடைபெறுகின்றது. ஏனைய பயிர்ச்செய்கைகளை வீட்டுப் பயிர்ச்செய்கை என்ற அளவிலேயே குறிப்பிட வேண்டி உள்ளது.

புத்தளத்திற்கு சிறப்பானது எனக் கூறக்கூடிய கைத் தொழில் எதுவும் காண்பதற்கில்லை. நுண் / சிறிய அளவிலான தொழில்களாக (Micro/ Small Scale Industries ) ஆடைத் தொழிற்சாலை, சிற்றுண்டி (மிக்ஷர்), மென்பானம் தயாரிப்பு போன்றவற்றைக் குறிப்பிட முடியும். பாரிய முதலீட்டு வியாபார நிறுவனம் சீமெந்துத் தொழிற்சாலையாகும்.

அரசும் அரச கூட்டுத்தாபனங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் தொழில்களை வழங்கி பிரதேசத்தின் பொருளாதாரத்திற்கு துணை நிற்கின்றன. வெளிநாட்டு வேலை வாய்ப்பையும் இவ்வகுதிக்குள் அடக்கலாம். பொதுவாக நோக்குமிடத்து புத்தளம் ஒரு நுகர்வுச் சமூகம்.

வரலாற்றுத் தகவல்களும் இடங்களும்

இலங்கையின் செவிவழிச் சரித்திர நாடகத்தொடரின் முதலாவது எனக் குறிப்பிடக்கூடிய விஜயன் - குவேனி கதையின் முதலாம் அங்கம் புத்தளத்தின் வடக்கு எல்லை (தம்பபன்னி )யிலிருந்து விரிகின்றது. இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் திடகாத்திரமான உடல்வாகைக்கொண்ட சத்தந்துதர்களாகக் காணப்பட்டதால் அரக்க/ இயக்க கோத்திரம் என அழைக்கப்பட்டதாக கருத்து உண்டு. விஜயன் குவேனியை சந்திக்கும் போது அவள் ஆடை தயாரிப்பதற்காக நூல் நூற்றுக்கொண்டிருந்தாள் என மகா வம்சம் குறிப்பிடுவதன் மூலம் அம்மக்களின் பண்பாடு தெளிவாகின்றது. தங்க அரியணைக்கு உரிமை கோரி அரக்க கோத்திர சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிணக்கை நிவர்த்தி செய்வதற்காக கௌதம புத்தர் இலங்கைக்கு வருகை செய்கின்றமை, இம் மக்களின் கைவினைத் திறனுக்கு உதாரணமாகின்றது. மேலும் இச் சம்பவத்தைக் கூறும் சமந்த கூட்ட வர்ணனையின் 517ஆம் செய்யுளில் குறிப்பிடப்படும் சிகதா தலாவ எனும் சொல் மணல் திடலைக் குறிக்கின்றது. இது புத்தளத்தின் வடக்கு பிராந்தியமாகும். மரணித்தவரடகளை நல்லட்க்கம் செய்வதற்காக சுட்ட களிமண்ணால் செய்த குடங்கள் புத்தள மாவட்டத்தின் வடக்கே "பொன்பரப்பி" யில் கண்டெடுக்கப்பட்டமை இம் மக்களின் உயர்ந்தத நாகரிகத்தை அமைதியாக பறைசாற்றும் தொல்பொருள் சான்றாகும்.

சிலாபம் - புத்தளம் - மன்னார் கடல் ஆழமற்றிருப்பதும், இந்தியாவுக்கு அண்மையில் அமைந்திருப்பலும், வங்காள விரி குடா ஊடாக வீசும் கப்பல் காற்று காரணமாகவும் சிலாபம், கல்பிட்டி, சிலாவத்துறை, மாந்தை, அரிப்பு மற்றும் குதிரை மலை கரைகள் புகழ்பெற்ற துறைமுகங்களாக பரிணமித்தன. இந்தீய, கிரேக்க, பாரசீக, பினீஷிய மற்றும் அராபி வர்த்தகக் குழுக்களும் தேச சஞ்சாரிகளும் அடிக்கடி நடமாடும் பகுதிகளாக திகழ்ந்தன.

வெளிநாட்டு தேச சஞ்சாரிகளுள் கி.பி.1345.09.21 ஆந் திகதி புத்தளம் நகருக்கு வருகை தந்த மொரோக்கோ தேசத்தவரான இபுனு பதூதா அவர்களின் பயணக்குறிப்புகள் முக்கியம் வாய்ந்த சான்றாகும். ஆதம் மலை (ஸ்ரீ பாத)யைத் தரிசிக்கும் நோக்கில் இலங்கையின் 'Battala' பத்தள நகரில் தரையிறந்கி,அதன் ஆட்சியாளனை சந்தித்ததாகவும், அவர் பாரசீக மொழியில் உரையாற்றியதாகவும், அரசுகள் ஆட்சியாளர்களைக் குறித்து உன்னிப்பாக கேட்டுக்கொண்டிருந்ததாகவும், மரத்தினால் செய்யப்பட்ட கோட்டை அவருக்கு சொந்தமாகவிருந்தது என்றும் குறிப்பிடுகின்றார். ஆதம் மலையை தரிசிக்கும் பயணத்திற்கு பல்லக்குடன் உதவியாளர்களையும் வழங்கியள்ளார். தெற்கு திசை நோக்கிப் பயணித்து பந்தர் சலாவத் (சிலாபம்) நகரை அடைந்து, அங்கிருந்து மலையகத்திற்குச் சென்று, மூன்று பகல்கள் ஆதம் மலையின் தங்கி நின்று, மீண்டும் 1394.10.17ஆம் திகதி புத்தளத்தை வந்தடைந்துள்ளார். புத்தளம் கரையில் குவிக்கப்பட்டிருந்த கருவாவுக்கு பகரமாக ஆடை மற்றும் பொருட்கள் பண்டமாற்று வர்த்தகத்தைப் பற்றி குறிப்பிடும் இபுனு பதூதா, புத்தளத்தை சிறிய நகரமாக வர்ணிக்கின்றார்.புத்தளத்தின் பெயரை வெளியுலகிற்கு காட்டிய இபுனு பதூதாவை கௌரவப்படுத்தும் நோக்கில் 1991ஆம் ஆண்டு புத்தளம் கடற்கரை வீதி, இபுனு பதூதா வீதி என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

வரலாற்று பெறுமதிமிக்க இடங்கள் பலவற்றை புத்தளம் பி.செ.பிரிவு கொண்டுள்ளதுடன், புராதனப் பெறுமதியைகொண்ட பொருட்களுள் இன்றுவரை பாதுகாப்பாக இருக்கும் கட்டடமாக மாவட்ட செயலாளர் அலுவலகம் (கச்சேரி) யைக்குறிப்பிட வேண்டும். இது ஒல்லாந்தர் காலத்தில் நாட்டின் பரிபாலன பணிகளுக்கு உதவியாயிருந்த ஆளுனரின் அலுவலகமாகும். மரத்தினால் ஆன மூட்டுகள் இல்லாத வளைவுகளைக் கொண்ட, 2 மாடி கட்டடமான இவ் அலுவலகம், இன்றுவரை நல்ல நிலையில் இருக்கின்றது.

கி.பி. 1720 இல் புத்தளம் நகருக்கு விஜயம் செய்த இலங்கை மன்னன் ஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திரசிங்ஹ அன்பளிப்பு செய்த அரச சின்னங்களில் பாதுகாப்பாக இருக்கும் ஊது குழல் மற்றும் கஸ்தூரி மானின் உரோமம் பதித்து செய்யப்பட்ட சாமரம் ஆகியவை புத்தளம் மொஹிதீன் ஜும்மா மஸ்ஜித் (பெரிய பள்ளி) யில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

கொழும்பு புத்தளம் பிரதான வீதியில் அமைந்துள்ள கத்தோலிக்க ஆலயம் மற்றும் நகர சபை அலுவலகத்துக்கு முன்னால் உள்ள சவச்சாலை ஆகியன தொல் பொருள்திணைக்களத்தினால் குறிப்பிடப்பட்ட புராதன பெறுமதியுள்ள இடங்களாகும். புத்தளம் H.S. இஸ்மாயில் ப்ளேஸ் (நோர்த் வீதி)யில் அமைந்துள்ள E.S.M. காசிம் மரைக்கார் வீட்டின் வயதும் ஏறத்தாழ 200 ஆகி விட்டது.

ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் நிருமாணிக்கப்பட்ட தற்போதைய உதவி பொலிஸ் அதிகாரி அலுவலகமும் தொல்பொருள் பெறுமதி உடையது.

புத்தளத்தின் பழங்கால பெருமைகளெல்லாம் காலமென்னும் கார் மேகத்தில் மறைக்கப்பட்டாலும், திட்டுபோலத் தோற்றமளிக்கும் கரு மேகங்களை கிழித்துக்கொண்டு வீசும் கதிரவனின் ஒளிக் கீற்றினைப் போல், புத்தளம் மக்களின் எளிமையுடன் நெகிழ்வுத்தன்மை கொண்ட வாழ்க்கை முறையும், தமது பிள்ளைகளின் கல்வியில், கலாசார விழுமியத்தில் அவர்கள் கொண்டுள்ள நேர் கருத்தியலும், ஒளிமயமான எதிர்காலத்தை கட்டியம் கூறும் முன்னறிவிப்புகளாகும்.

 

1993 இல் இருந்து சேவையாற்றிய பிரதேச செயலாளர்கள்

பிரதேச செயலரின் பெயர்

இருந்து

வரை

திரு. எம்.பி.திஸாநாயக்க 1993 1994
திரு. டபிள்யு.எம்.பிரேமரத்ன 1995 2001
திரு. ஏ.சீ.எம்.நபீல் 2002 2012
திரு. எம்.ஆர்.எம்.மலிக் 2012 2016
திரு. டபிள்யு.எம்.சீ.கே.வன்னிநாயக்க 2016.04.04 2018.03.19
திருமதி. எச்.எம்.ஹேரத் 2018.03.20 2020.09.02
திருமதி. எஸ்.ஏ.வய்.ஆர். ஜயதிலக 2021.01.25  

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top